மீண்டும் ஊட்டி நகராட்சி அதிரடி…! 97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து..

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் வெளிப்புற பகுதியில் மொத்தம் 1,587 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஊட்டி நகராட்சி இந்த கடைகளுக்கு வாடகை உயர்த்தி மறு நிர்ணயம் செய்தது. ஆனால் ஊட்டி நகராட்சி உயர்த்திய வாடகையை வியாபாரிகள் செலுத்தாமல் இருந்து வந்ததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.35 கோடி பாக்கி ஏற்படாது.

இதனால் ஊட்டி நகராட்சி நிர்வாகம் பல கட்டங்களாக வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பலன் இல்லை. இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வாடகை செலுத்தாத 757 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நிலுவை தொகையை வியாபாரிகள் செலுத்த இதுவரை ரூ.15 கோடிக்கும் மேல் நிலுவை தொகை வசூலாகி உள்ளது.

இருந்தாலும் சீல் வைத்தும் 183 கடை உரிமையாளர்களுக்கு இதுவரை ஏற்கனவே ஒரு மாதம் கால அவகாசம் அளித்தும் வாடகை செலுத்தவில்லை. ஆகையால், அந்த கடைகள் மறு ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளுக்கு 2 வார கால அவகாசம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது மட்டுமின்றி உரிய நாட்களில் வாடகை செலுத்தாவிட்டால் அந்த கடைகளை மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குத்தகை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுவரை வாடகை செலுத்தாமல் உள்ள 97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த கடைகளை நகராட்சி கையகப்படுத்தி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது என ஊட்டி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.