நாட்டின் 78-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும் மற்ற முதலமைச்சர்கள் அவரவர் கோட்டையில் தேசிய கொடி ஏற்றினர். அதனைத்தொடர்ந்து, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு வேளைக்கு ரூ.5-க்கு உணவு வழங்கும் அண்ணா உணவகத்தை என்டிஆர் மாவட்டம், குடிவாடாவில் நேற்று திறந்து வைத்தார்.
சுதந்திர தினமான நேற்று ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், குடிவாடாவில் அண்ணா உணவகத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். பின்னர், ஏழைகளுக்கு சந்திரபாபு நாயுடுவும், அவரது மனைவியும் உணவு பரிமாறினர். மேலும், அவர்களுடன் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் என அனைவரும் உணவருந்தினர்.
அப்போது, சந்திரபாபு நாயுடுவுடன் உணவருந்திய 10 ஏழை மக்களிடம் உள்ள பிரச்சினைகளை சந்திரபாபு நாயுடு கேட்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக உதவும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். ஆந்திர மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 100 இடங்களில் அண்ணா உணவகங்கள் செயல்படும் என்றும், படிப்படியாக செப்டம்பர் இறுதிக்குள் ஆந்திராவில் 203 அண்ணா உணவகங்கள் செயல்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல், ஆந்திராவிலும் அண்ணா உணவகங்களை அமைக்க வேண்டுமென விரும்பிய சந்திரபாபு நாயுடு, கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா உணவகங்களை தொடங்கினார். இதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், சில மாதங்களிலேயே தேர்தல் வந்து, ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். அவர் அண்ணா உணவகங்களை மூட உத்தரவிட்டார். அதையும் மீறி, யாராவது நடத்தினால், அவர்கள் மீது காவல் துறைநடவடிக்கை எடுத்தது. இதனால், ஆந்திராவில் அண்ணா உணவகங்கள் மூடுவிழா கண்டது.