மினி எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள்..!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மினி எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

அப்போது கனிமொழி எம்.பி. மேடையில் பேசுகையில், “இந்த பயணம் என்பது பல விஷயங்களை சொல்லி கொடுக்க கூடிய ஒன்று, ஒரு காலத்தில் திருநங்கைகள் ஒரு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றாலும் வாங்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது, திருநங்கைகள் இருக்கிறார்கள் என்று எந்த அடையாளமும் இருக்காது. இந்த சமூகம் அவர்கள் மீது காட்டிய வேறு விதமான பார்வை தான் அதிகளவில் திருநங்கைகளை ஆபரேஷன் செய்ய வைத்தது.

திருநங்கைகள் கல்லூரிகளுக்கு செல்ல விரும்பினால் நீங்கள் ஆணா? பெண்ணா? என்று கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் அங்கேயே அவர்களது வாழ்க்கை முற்றுப்புள்ளியோடு நின்ற சூழல் இருந்தது. வாழ்வதற்கே, போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள். திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தலைவர்தான் கலைஞர். பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதை செய்து கொண்டிருக்கிறது.

இந்தக் கல்வி உங்கள் மீது ஒரு நம்பிக்கையை தரும். எங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடியது கல்வி. நீங்கள் பல பேருக்கு முன்னுதாரணமாக மாற முடியும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள்” என கனிமொழி பேசினார்.