தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி தையல் கடை நடத்தி வருகிறார். நடக்க முடியாத மூர்த்தி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வரும் மண் சாலை தாழ்வான இடத்தில் இருந்து மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் மூலமாக அந்தப்பகுதியில் அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் மண் சாலையால் தனக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும் மண் சாலை உள்ள பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுப்பினார்.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கான டுவிட்டர் கணக்குக்கு இந்த கோரிக்கை குறித்த மனுவை அண்மையில் அனுப்பினார். இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவுப்படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினார்கள். அதன் அடிப்படையில் அங்கே மண் சாலை இருந்த பகுதியில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.