மாயமான 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் கொலைக்கு நீதி கேட்டு 2 பாஜக அமைச்சர்கள், 3 MLA க்கள் வீடுகள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் நீடிக்கும் இனக்கலவரத்தின் ஒருபகுதியாக கடந்த 11-ஆம் தேதி ஜிரிபாம் மாவட்டம் போராபெக்ராவின் ஜகுராதோர் கராங் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கடைகளை தீ வைத்து எரித்ததுடன், அங்கிருந்த CRPF வீரர்கள் முகாம் உள்பட சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அப்போது CRPF வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தீவிரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகள், 3 பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றதுடன், மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 2 ஆண்களையும் தீ வைத்து எரித்து கொன்றனர். இதனால் ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வந்தது. மாயமான 6 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை போராபெக்ரா மாவட்டத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் மணிப்பூர் – அசாம் எல்லையில் ஜிரி நதி – பக்ரா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டன. அதே பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேரின் உடல்கள் உடல் கூராய்வுக்காக அசாமின் சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த தகவல் பரவியதால் இம்பால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். மேற்கு இம்பாலின் குவாகீதெல், சகோல்பந்த் தேரா உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடுத்தனர். இதன் காரணமாக நேற்று அங்குள்ள வணிக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
மேலும் 6 பேரின் மரணத்துக்கு நீதி கேட்டு மணிப்பூர் பாஜக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் 6 பேரின் கொலைக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்” என முழக்கமிட்டனர்.