மாநகராட்சி ஆணையர் அதிரடி: கால்வாய்களில் குப்பை கொட்டியவர்களுக்கு 2 லட்சம் அபராதம்

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் நான்காவது மண்டலம் கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், ஜவகர் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய் ஆகிய கால்வாய்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து கால்வாய்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, மாநகராட்சி ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து வடக்கு வட்டார துணை ஆணையர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழு நான்காவது மண்டல அலுவலர் தலைமையில் நேற்று கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டது.

சோதனையில் கால்வாய்களில் குப்பை கொட்டிய வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுனங்கள் ஆகியவற்றிற்கு ரூ.2,05,000 அபராதம் விதிக்கப்பட்டது. கால்வாய்களில் குப்பைகளை கொட்டி நீர்நிலைகளின் ஒட்டத்திற்கு தடை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.