“அநாதை மொழி இந்தி ஆதி மொழி தமிழை ஆள நினைக்கலாமா?” எனக்கேள்வி கேட்டு மத்திய அரசை விளாசி 5-ஆம் வகுப்பு மாணவி. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை இன்னும் தமிழக அரசு ஏற்கவில்லை. தமிழக அரசை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை பின்பற்றும் நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
அதாவது தமிழகத்தை எடுத்து கொண்டால் முதல் மொழியாக தமிழ், இரண்டாவது மொழியாக ஆங்கிலம், மூன்றாவது மொழியாக நம் நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை மாணவ-மாணவிகள் தேர்வு செய்ய வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை தெரிவிக்கிறது. ஆனால் தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை மூலமாக இந்தியை மத்திய அரசு திணிக்க முயற்சிக்கிறது என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எடுத்து கொண்டால் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கின்றன.
இதனால், புதிய கல்வி கொள்கை என்பது தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியாக கூறி விட்டார். இதனால் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்சனை உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கடலூரில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த காரணம் கொண்டும் புதிய தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த கையெழுத்திடமாட்டோம். அந்த பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று கூறினார். 2 நாட்களுக்கு முன்பு கடலூரை சேர்ந்த LKG மாணவி நன்முகை ரூ.10 ஆயிரம் வழங்கி வெளியிட்ட வீடியோவில், ‛‛முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம்.
நான் LKG படிக்கிறேன். இன்று நீங்கள் கடலூரில் பேசியபோது மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நமக்கு தரவில்லை என்று கூறினீர்கள். தமிழ்மொழியை காக்க பாடுபடுவேன் என்றும் கூறினீர்கள். எனது பாலு தாத்தா, சாந்தி பாட்டி, இருவரும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5-ஆம் வகுப்பு டேப்லின் ரோஸ் என்ற மாணவி தமிழக கல்வி துறைக்கு தனது சிறுசேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரத்தை வழங்கி உள்ளார். மாணவி டேப்லின் ரோஸ் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ‛‛வணக்கம்.. என் பெயர் டேஸ்லின் ரோஸ். நான் 5-ஆம் வகுப்பு படிக்கிறேன். குமரி மாவட்டத்தை சேர்ந்தவள்.
அநாதை மொழியான இந்தி மொழி எனது ஆதி மொழியான தமிழை ஆள நினைக்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம். தமிழுக்கு அமுதென்று பெயர். அந்த தமிழ்.. இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு மேல்.. தமிழே அறம். தமிழே உயிர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? நான் எனது சிறுசேமிப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை தமிழ்நாடு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன். தமிழ் வாழ்க” என்று பேசியுள்ளார்.