காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் பாஜகவில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். ரஞ்சனா நாச்சியார் போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதைக் கண்டார். சிலர் பேருந்தின் மேற்கூரையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர்கள் செல்வதைக் கண்ட ரஞ்சனா நாச்சியார், பேருந்தின் குறுக்கே சென்று மறித்து நிறுத்தி இருக்கிறார்.
பேருந்தின் ஓட்டுநரையும் டிரைவரையும் கடுமையாக கண்டித்துப் பேசினார். அவராகவே சென்று படிக்கட்டில் தொங்கியவர்களை இறங்கிச் செல்லுமாறு ஆவேசமாக ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி இறங்க யோசித்தவர்களை அடித்து இறக்கினார். இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ரஞ்சனா நாச்சியாரின் செயல் சட்டத்தை கையில் எடுத்து மாணவர்களை எப்படித் தாக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், பேருந்து சென்ற வழித்தடம் மற்றும் ரஞ்சனா நாச்சியாரின் இருப்பிடத்தை காவல்துறை கண்டறிந்து கைது செய்தனர். ஆனால் ரஞ்சனா நாச்சியார், ‘வாரண்ட் இருக்கிறதா.. எஃப்.ஐ.ஆர் காட்டுங்கள்’ என்று கேட்டு காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ய, பெண் காவலர் உதவியுடன் ரஞ்சனா நாச்சியாரை காவல் வாகனத்தில் ஏற்றினர். ரஞ்சனா நாச்சியார் மீது அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.