பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது.” என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “பஹல்காமில் நடந்த இழிவான கொலை தாக்குதல் குறித்து நேற்று பின்னிரவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் மூத்த தலைவருடன் பேசினேன். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
துன்பங்களுக்கு மத்தியில் ஒற்றுமையுடன் செயல்படுவது காலத்தின் தேவையாகும். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த மற்றும் உறுதியான பதிலடி கொடுக்கப்பட வேண்டியது அவசியம். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாநிலத்தின் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.” என மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.