மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலையை பார்வையிட்ட அமைச்சர்கள்

சாலைகள் விரிவாக்கம் ஆய்வு மேற்கொண்ட போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலையை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் இருந்து மாங்காடு, அனகாபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அந்த சாலைகள் விரிவாக்கம் செய்வது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்றத்தூர் பஜார் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக சாலை விரிவாக்க பணிகள் நடத்த வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்தார். இந்நிலையில் சாலை விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்த போது குன்றத்தூர் பகுதியில் வெண்கல சிலைகள் தயார் செய்யும் பகுதிக்கு எ.வ. வேலுவை, தா.மோ. அன்பரசன் அழைத்துச் சென்றார்.

அங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலைகள் இங்குதான் செய்யப்பட்டு வருவதாக அமைச்சரிடம் கூறிய நிலையில் அங்கு செய்து கொண்டிருந்த சிலைகளை பார்வையிட்ட எ.வ.வேலு சிலைகள் தத்ரூபமாக இருப்பதாகவும் தனக்கும் ஒரு சிலையை வடிவமைத்து கொடுக்க வேண்டும் என ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றார்.