புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் சிறப்பு அஞ்சல் உறைகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் “புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து அவற்றை பிரபலப்படுத்துவதாகும்.
புவிசார் குறியீடு பெற்றுள்ள, புதுவையில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகித கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. கடிதம் மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்து இருக்கிறது. வரலாறு படைத்திருக்கிறது. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்கு வேண்டியவர்களிடம் மனம்விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் கடிதங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன. கரோனா பெருந்தொற்று, கை-கால்கள் கழுவுவது போன்ற நம் முன்னோர்களின் சில பழக்க-வழக்கங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம்” என தெரிவித்தார்.