மத்திய மந்திரி டுவிட்டர் கணக்கு முடக்கம்

நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான பதிவுகள், சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்றவற்றில் வெளியாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அவற்றை பரிசீலித்த மத்திய அரசு, சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போட முடிவு எடுத்தது. அந்த வகையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய விதிகளை கொண்டு வந்தது.

இந்த விதிமுறைகள் கடந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வந்துள்ளன. இவற்றை ஏற்க சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அவகாசம் முடிந்து விட்டது. ஆனால் டுவிட்டர் நிறுவனம் இந்த விதிமுறைகளை ஏற்காமல் அடம் பிடித்து வந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இறுதி நோட்டீசை அனுப்பியது. மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப விதிகளை டுவிட்டர் ஏற்காததால், அந்த நிறுவனம் சட்ட உதவிகளை பெறுவதற்கான அந்தஸ்தை இழந்தது.

அந்த தளத்தில் அதன் கணக்குதாரர்களால் வெளியிடப்படுகிற சட்டவிரோத பதிவுகளுக்கு, டுவிட்டர் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் நேற்று திடீரென முடக்கியது.