“மத்திய புலனாய்வு நிறுவனங்கள் மூலமாக பாஜக எங்கள் கட்சியை ஒடுக்க நினைக்கிறது..!”

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் செய்தியாளர்களை அமைச்சர் அதிஷி மர்லினா சந்தித்தார். அப்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சோதனைகள் மூலமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மதுபான கொள்கை ஊழல் என்ற பெயரில் சிலரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது, சிலருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சோதனைகள் நடத்தப்பட்டும், அமலாக்கத்துறை இதுவரை ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை.

ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நீதிமன்றம் கூறிய நிலையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் அமலாக்கத்துறை ஒரு உறுதியான ஆதாரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அரசுதரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கை மாறியிருந்தது. வீடியோ ஆதாரங்கள் வழங்ப்பட்டது, அதில் ஒலி நீக்கப்பட்டிருந்தது.

இப்போதும் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளர், எம்.பி., என்.டி குப்தா, அரவிந்த் கேஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய புலனாய்வு நிறுவனங்கள் மூலமாக பாஜக எங்கள் கட்சியை ஒடுக்க நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லி கொள்கிறேன். நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்” என அமைச்சர் அதிஷி மர்லினா தெரிவித்தார்.