மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் மோசடி.. பாஜக பிரமுகர் மனைவியுடன் தலைமறைவு..!

விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் வசூல் செய்து மோசடி செய்த பாஜக பிரமுகர் ஜெயராம் என்பவர் மனைவியுடன் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான லோகேஷ்குமார் என்பவர் முதுகலை பட்டதாரி விளையாட்டில் ஆர்வம் கொண்ட லோகேஷ்குமார், மாநில, மத்திய அரசின் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற விரும்பியுள்ளார். அதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் ‘யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா’ என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராம் என்பவர், சென்னை பம்மலை அடுத்த பொழிச்சலூர் பாலாஜி நகரில் தனக்கு அலுவலகம் இருப்பதாகவும் அங்கு நேரில் வந்து விவரத்தை கேட்டு தெரிந்துக் கொள்ளுமாறு கூறினார். இதை உண்மை என்று நம்பிய லோகேஷ்குமார் அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் விவரங்களை கூறியுள்ளார்.

பின்னர் லோகேஷ்குமார் அந்த நிறுவனத்தில் இணைந்து சிலம்பம் கற்று சான்றிதழும் பெற்றுள்ளார் அந்த சமயத்தில், தான் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு துணை தலைவர் பொறுப்பில் உள்ளதாக கூறிய ஜெயராம், தனக்கு தெரிந்த மத்திய அமைச்சர்கள் இருப்பதாகவும் லோகேஷ் குமாரிடம் கூறியுள்ளார். அவர்கள் மூலம் விளையாட்டு துறை ஒதுக்கீட்டில், மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளதாக தெரிகிறது.

அவரது ஆசை வார்த்தைகளை உண்மை என நம்பிய லோகேஷ்குமார், தனக்கும் வேலை வாங்கி தருமாறு கேட்டதுடன், தன்னுடைய சான்றிதழ்களை, ஜெயராமனிடம் கொடுத்துள்ளார். அப்போது மத்திய அரசு வேலை வாங்கித்தர ரூ.17 லட்சம் ரூபாய் செலவாகும் என ஜெயராம் கூறியுள்ளார். இதை நம்பிய லோகேஷ்குமார், பல தவணைகளாக வங்கி கணக்கு மூலம், 16 லட்சம் ரூபாய், செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் என, 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி ஜெயராம் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதையறிந்த பின்னர் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த லோகேஷ்குமார் கடந்த ஜனவரி மாதம், தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அப்புகாரை சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தாம்பரம் மாநகரா காவல் துறை துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சங்கர் நகர் காவல்துறை ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகிறார்கள்.