அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி, அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அன்கித் திவாரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரியை 3 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறைக்கு, திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து காவல்துறை விசாரணைக்குப் பின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட அன்கித் திவாரிக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அன்கித் திவாரி சிறையில் தனக்கு முதல் வகுப்புக் கேட்ட மற்றும் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அதிகாரிகள் இதுபோன்ற தவறு செய்யும்போது அதை விசாரணை செய்ய மாநில விசாரணை பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அரசுத்தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.