திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சம் வழங்கிய சான்றிதழை திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் M.ஜோசி நிர்மல் குமார் அவர்கள் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் A. கழனியப்பன் அவர்களிடம் வழங்கி வாழ்த்தினார்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் 2024 -ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், வருடாந்திர தரவரிசையில் சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்த திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் M. ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் A. கழனியப்பன் , உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜியாவுல் ஹக் அவர்கள், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் அவர்கள் மற்றும் முத்துப்பேட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் M. ஆனந்த் அவர்கள், திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக்காவல் கண்காணிப்பாளர் A.பிலிப் பிராங்களின் கென்னடி அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் P.ராஜா ஆகியோர் உடனிருந்தார்கள்.
இந்த நிகழ்வில் பேசிய திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் M.ஜோசி நிர்மல் குமார், ‘இன்றியமையாத காவல்துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் முறையாக கையாண்டு சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்’ என தெரிவித்தார்.