முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.
நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை இன்று மாலை 6.50 மணியளவில் வெளியிடவுள்ளார். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெற்று கொள்ளவுள்ளார்.
இந்த நாணயத்தினை வெளியிட தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணய வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இதனை அடுத்து கலைஞர் நினைவிடம் அருகே உள்ள கலைஞர் உலகம் எனப்படும் அருங்கட்சியத்தை பார்வையிட்டார்.