மதுரை உயர்நீதிமன்ற கிளை: “இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.. ஆனால்..!?

தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்பு அமர்ந்து சிலர் மது குடித்த வருவதாகவும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பதாகவும் காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆதிநாயகி என்கிற பெண் காவலர் சென்றிருக்கிறார். கோயிலின் முன்பு குடித்துக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து, பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

இது குறித்து பெண் காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், அநாகரீமாக நடந்துக்கொண்ட மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, வைத்து விசாரித்ததில் மூவரில் ஒருவர் இந்து முன்னணி நிர்வாகி குபேந்திரன் என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருக்கின்றன. எனவே மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை சிறையில் அடைத்தது.

சிறையில் இருக்கும் குபேந்திரன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்ய, இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், “இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டது” என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.