மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..!

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந்த ஆரிஷ் ராஜ்புரா என்ற இடத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரசாவை மாற்றுவது தொடர்பாக பரேலியில் உள்ள மாநில சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இது தொடர்பான கோப்பு 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பரேலி சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மூத்த உதவியாளர் ஆக பணியாற்றி வந்த முகம்மது ஆசிப் என்பவரை சந்தித்தார்.

அப்போது உரிய நடைமுறை களை முடித்து கோப்பினை ஒப்புதலுக்கு அனுப்ப ஆரிஷிடம் முகம்மது ஆசிப் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை தன்னால் தரமுடியாது என்று ஆரிஷ் கூறியதை தொடர்ந்து அப்பணத்தை தவணை முறையில் தருமாறு முகம்மது ஆசிப் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆரிஷ் புகார் கொடுத்தார். இதில் முகம்மது ஆசிப்பை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் முதல் தவணையாக ரூ.18 ஆயிரத்தை முகம்மது ஆசிப் பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.