பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சென்னை கே.கே. நகர், 9-வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் வீட்டுமனை வாங்க முயற்சித்தபோது காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, பரணி புதூரைச் சேர்ந்த சிந்துஜா ரியல் எஸ்டேட் நடத்திவரும் பண்பரசன் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
பண்பரசன், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்தூரபுரத்தில் கல்யாணி என்பவருக்கு சொந்தமான 2,350 சதுர அடி நிலத்தின் அசல் பத்திரம் தன்னிடம் இருப்பதாக கூறி ரூ.99 லட்சத்திற்கு விலை பேசியுள்ளார். இதில், பண்பரசன், இரண்டு தவணைகளில் காசோலை மற்றும் பணமாக ஸ்ரீனிவாசனிடம் ரூ.99 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, குன்றத்தூர் சார் – பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை பத்திரப்பதிவும் செய்து கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீனிவாசன் தான் வாங்கிய நிலத்தை சென்று பார்த்தபோது, இந்த நிலத்தின் உரிமையாளரான கல்யாணி, நிலத்தை யாருக்கும் விற்கவில்லை என கூறியுள்ளார். மேலும் நிலத்தின் மதிப்பு ரூ.1.07 கோடி எனவும் கூறியுள்ளார். இதனை கேட்ட ஸ்ரீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மாங்காடு, பரணி புதூரைச் சேர்ந்த பண்பரசன் நேற்று கைது செய்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.