பொன் ராதாகிருஷ்ணன் நிரூபித்தால் நான் பொது வாழ்க்கையை விட்டே போறேன்..!

நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், பிரச்சார அனல் பறக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தற்போதையை எம்.பி விஜய் வசந்த் மீண்டும் களமிறங்கி நிலையில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே பலமாக இருக்கும் தொகுதி. முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி நசரேத் பசிலியன் போட்டியிடுகிறார். 2014-ல் தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் அதிமுக கூட்டணி வென்றபோதும் கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இந்த முறையும் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதால் களம் எந்தக் கட்சிக்கும் அவ்வளவு ஈஸியாக இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு ஆதரவாக திமுக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் உள்ள விஜய் வசந்த் எம்.பி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “அதிமுக ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தில் 39 கல்குவாரிகள் இயங்கி வந்தன. தற்போது 6 குவாரிகள் மட்டுமே உள்ளன. இந்த 6 குவாரிகளும் உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயங்கக்கூடியவை. தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. கனிம வளம் தொடர்பாக ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற தெரிவித்துள்ள கருத்துக்களை உங்களிடம் தெரிவிக்கிறேன். அதாவது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லும் கனிம வளங்களை தடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளது.

அதேபோல் மத்திய அரசின் மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் டிரான்ஸ்போர்ட் சட்டம் மத்திய அரசின் கையில் உள்ளது. இது தொடர்பான வழக்கில் மாநில அரசுதான் மேல்முறையீடு செய்து வழக்கை நடத்தி வருகிறோம். திமுக சார்பில் தான் பொதுநல வழக்கு போட்டு வாதாடி வருகிறோம். பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனோ, நாம் தமிழர் கட்சியினரோ பொதுநல வழக்கு போட்டு உள்ளார்களா? இல்லையே. இந்த வழக்கில் கூட தன்னை இணைத்துக் கொள்ளாத பொன். ராதாகிருஷ்ணன் கபட நாடகம் ஆடுகிறார்.

நான் ஏற்கனவே சவால் விட்டு இருக்கிறேன். கனிம வள பிரச்சனையில் நான் உடந்தை என்று பொன், ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். அவர் மட்டுமல்ல, கனிம வள கொள்ளைக்கு நான் உடந்தை என யார் நிரூபித்தாலும் நான் பொது வாழ்க்கையை விட்டே விலகி விடுகிறேன்.” என அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.