புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த காவலர் மற்றும் பெண் கைது ..!

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் என்பவர், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதன் புகார் மனுவில், தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் இவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் கூடாநட்பு ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு திருநெல்வேலியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, தங்க வைத்திருந்தார்.

இந்நிலையில், வளர்மதியை மாவட்ட வருவாய் அலுவலர் என்று பலரிடம் அறிமுகப்படுத்தி, புறம்போக்கு நிலத்துக்கு பட்டா பெற்றுத் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, தலைமைக் காவலர் முருகராஜும், வளர்மதியும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும் , சசிகுமார் திருநெல்வேலி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்துக்கு பட்டா மாறுதல் வாங்கித் தருமாறு இவர்களை அணுகியுள்ளார். இதற்காக வளர்மதியிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பட்டா மாறுதல் செய்து கொடுக்கவில்லை.

இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இதில், வளர்மதி, முருகராஜ் ஆகியோர் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.