காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு இருந்தது.
இதனால் காளியம்மாள் நாதக-வில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அதை விட அவர் திமுகவில் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து காளியம்மாள் கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார்.
இது குறித்து சீமானிடம் கேட்ட போது கட்சிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். அது போல் போனால் போகட்டும் என வழியனுப்பி வைக்க வேண்டும். இலையுதிர்காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர்காலம் என தெரிவித்திருந்தார். எனவே காளியம்மாள் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காளியம்மாள் மீது சீமான் அண்மைக்காலமாக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவில் இணைய போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து செல்வோர் செல்லலாம் என சீமானே சிக்னல் கொடுத்துவிட்டாரே! அப்படி வந்தால் காளியம்மாளை ஏற்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.