சிவனுக்கு உகந்த நாளான மகாசிவராத்திரி நேற்று கொண்டாடப்படுகிறது. நேற்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், பார்வதிதேவி வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை ‘மகா சிவராத்திரி’ என்று கொண்டாடுகிறோம்.
மகா சிவராத்திரி அன்று இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள். சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, ‘மகா சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. பார்வதிதேவி வழிபாட்டின் முடிவில் சிவபெருமான் அவர்கள் பார்வதிக்கு காட்சி தந்தார். அப்போது, அவரிடம் பார்வதிதேவி, “ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்” என்றாள். ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார்.
ஒரு முறை பிரம்மனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் இடையே ‘தங்களில் யார் பெரியவர்?’ என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நிற்க ‘ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று சொல்ல அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டியபடி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். சிவபெருமானின் இந்த கோலத்தையே, ‘லிங்கோத்பவர் கோலம்’ என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.
மகா சிவராத்திரியை ஒட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் விழாக்கோலம் பூண்டது. பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் பக்தர்கள் மகா சிவராத்திரி முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்து இருந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு பிறவி மருந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் பிறவி மருந்தீஸ்வரருக்கு பால் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் திமுக நகர செயலாளர் R.S. பாண்டியன், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன் மற்றும் கோவில் செயல் அலுவலர் முருகையன் ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.