நவீன காலம், கடந்த காலங்களில் கடைக்கு சென்று கையால் தொட்டு பார்த்து, அதன் தரம் மற்றும் தன்மையை உறுதி செய்து நமக்கு தேவையானவற்றை வாங்கி வந்தோம். ஆனால் இப்போதைய எல்லாமே டிஜிட்டல் காலம் செல்போனில் ஸ்டார் ரேட்டிங்க் எவ்வளவு என்பதை பார்த்து வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து விடுகிறோம். இன்று உலகம் முழுவதிலும் ஆன்லைனிலேயே உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் நடைமுறை வந்துவிட்டது. நள்ளிரவு 12 மணிக்கு கூட வீட்டில் இருந்தபடியே உணவகத்தை தேர்வு செய்தால் போது அடுத்த அரை மணி நேரத்தில் நம் வீட்டுக்கு வந்துவிடும். நேரம் மற்றும் அலைச்சல் தவிர்ப்பதற்காக ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் இன்று பரவி கிடக்கிறது.
இதன் விளைவாக ஒருசில நேரங்களில் கெட்டுப்போன உணவுகள், பல்லி விழுந்த உணவுகள் அனுப்பப்பட்டு விடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிப்பதும், இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் செய்திகளும் நடைபெறாமல் இல்லை. அந்த வகையில், பேக்கரியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பஞ்சாப்பில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா அருகே குடும்பத்துடன் வசித்து வரும் சிறுமி மான்வி. 10 வயதே ஆன மான்வி கடந்த 24 ஆம் தேதி தனது 10 – வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் என்றாலே கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்வது தானே வழக்கம். அந்த வகையில் சிறுமியும் தனது தந்தையிடம் கேக் கேட்டுள்ளார். அவரும் பட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக்கை ஆர்டர் செய்துள்ளார். சரியாக 7 மணிக்கு சிறுமி மான்வி தனது தாத்தா ஹர்பன் லால், தந்தை, சகோதரி ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் ஒவ்வொருக்கும் வாயில் கேக்கை ஊட்டி விட்டார் சிறுமி மான்வி. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதை வீடியோவும் அவர்கள் எடுத்துள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கேக்கை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டு இருந்த நிலையில், சிறிது நேரத்தில் சிறுமி மான்விக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. சிறுமி தாத்தாவிடம் தொண்டை வறண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதேபோல் குடும்பத்தினரும் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளனர்.
இதனால் கேக் சாப்பிட்டதாலேயே இப்படி ஆகிறது என்பதை உணர்ந்தனர். இதையடுத்து மறுநாள் காலை சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும் சிறுமி மான்விக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கேக் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.