பிரேமலதா விஜயகாந்த்: விஜயபிரபாகரன் எனக்கு மட்டும் மகன் அல்ல..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தேசிய தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான நாராயண சாமியை ஆதரித்து பெரியகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது, “கேப்டன் விஜயகாந்த் ஏராளமான திரைப்படங்களுக்காக தேனியில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.

கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் படப்பிடிப்பு இங்கு தான் நடந்திருக்கிறது. விஜயகாந்தை உங்களுக்கு நன்றாக தெரியும். கேப்டன் நம்மை விட்டு எங்குமே போகவில்லை ஒரு தெய்வமாக இருந்து நாம் அனைவரையும் வழி நடத்தி வருகிறார். அன்னதான பிரபுவாக அவர் தான் சம்பாதித்த பணத்தில் அனைவருக்கும் அன்னதானம் செய்தார். அதன் காரணமாகத்தான் அவர் துயிலும் கேப்டன் கோவிலில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கணவனை இழந்த ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பெண்களான அனைவருக்கும் தெரியும்.

விஜயகாந்த்தும் நானும் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என்பதும் தேமுதிக தொண்டர்களுக்கும் பெண்களுக்கும் தெரியும். இருந்த போதும் கேப்டன் இழப்பை மனதில் வைத்துக் கொண்டே துக்கம் வேதனை இருந்தாலும் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாற்பது தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகிறேன். அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கேப்டன் விஜயகாந்த்தும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் முதலமைச்சருமான ஜெயலலிதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள். அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற கூட்டணியாக இருந்தது. அவர்கள் வெற்றி பெற்றது போலவே ஜெயலலிதா இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளராக பழனிச்சாமியும் கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் நானும் சந்திக்கும் இந்த தேர்தலை பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் எனது மகன் விஜய பிரபாகரனுக்காக நான் ஒரு நாள் கூட பிரச்சாரம் செய்யவில்லை ஏன் உங்கள் மகனுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்யவில்லை என கேட்கிறார்கள்.

விஜயபிரபாகரன் எனக்கு மட்டும் மகன் அல்ல நான் பொது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் எனக்கு சகோதர சகோதரிகள் தான் எனது மகன்கள் மாதிரி தான். உங்கள் அண்ணியாக இல்லாமல் அன்னை போல இருக்கிறேன். அதிமுக கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான வரவேற்பு இருக்கிறது நிச்சயம் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.