தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்த செல்வமுருகன் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார். சென்னை எழும்பூர் புதுபேட்டை காவலர் குடியிருப்பில் நான்கு வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புக்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஆயுதப்படை காவலர் செல்வமுருகன், கமலக்கண்ணன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது குடியிருப்பின் 14-வது மாடிக்கு தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வால்வை முடுவதற்காக சென்ற செல்வ முருகன் தவறுதலாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் கால் தவறி விழுந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது மரணம் மர்மமான முறையில் ஏற்பட்டதாகவும், அதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் செல்வ முருகன், மர்மமான முறையில் 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் உண்மை நிலையைக் கண்டறிந்து. மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அவரின் குடும்பத்தை அரசு காப்பாற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.