பாஜக முன்னாள் அமைச்சர் கூட்டுறவு வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தாததால் மோசடி வழக்கு பதிவு

கர்நாடக மாநில முன்னாள் பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி பெலகாவியில் சவுபாக்யா சர்க்கரை ஆலை ஒன்று நடத்தி வருகிறார். இந்த சர்க்கரை ஆலையின் வளர்ச்சிக்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கர்நாடகா கூட்டுறவு வங்கியில் ரூ.232.88 கோடி கடனாக பெற்றார். ஆனால் வட்டி, அசல் மற்றும் அபராதம் ஆகியவற்றை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து, அசல், வட்டி, அபராதம் என மொத்த நிலுவைரூ.439.7 கோடியாக உள்ளது. கூட்டுறவு வங்கி பல முறை வலியுறுத்தியும் கடனை செலுத்தவில்லை.

இதனால் வங்கி நிர்வாகம் பெலகாவியில் உள்ள‌ விஸ்வேஸ்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதன்பேரின் ரமேஷ் ஜார்கிஹோளி, அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் மீது காவல்துறை இந்திய குற்ற வியல் தண்டனை சட்டம் 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அரசு வேலை கேட்டு சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ரமேஷ் ஜார்கிஹோளி மீது பரபரப்பு புகார் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.