2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே அதிமுக மீண்டும் திரும்புகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சியின் குழு நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசினர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல்கள் அக்கட்சியில் வலுத்து வந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தார். அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
அண்மையில், திமுகதான் எதிரி; இதர கட்சிகள் அனைத்தும் எதிரி அல்ல; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என கூறி இருந்தார். இதனால் அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல்கள் பரவின. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர்.
இதனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெறுவது உறுதியானது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது சமூக வலைதளப் பக்கத்தில், 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பதிவிட்டு இருந்தார். அமித் ஷாவை மட்டுமல்லாமல், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவையும் எடப்பாடி தலைமையிலான அதிமுக தலைவர்கள் குழு நேற்று டெல்லியில் சந்தித்தது. இதனால் தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகி வருகிறது.