பாகிஸ்தான் ‘உளவு’ பார்த்த இளம்பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது..!

இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த சமூக வலைதளங்களில் பிரபலமாக டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை காவல்துறை கைது செய்யப்பட்டு இருப்பது தான் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் மீது கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, மே 10 ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் அன்று இரவும் பாகிஸ்தான் இந்தியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு தற்போது பதற்றம் சற்று தணிந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் பாகிஸ்தானுக்கு ஏஜெண்டுகளாகவும், ரகசியங்களை சேகரித்துக் கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

இளம்பெண் ஜோதி மல்ஹோத்ரா, 3,77,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரை கைது செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி மல்ஹோத்ரா மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.