பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் கேரள சுற்றுலா பயணியின் கேமராவில் பதிவை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜித் ரமேசன் என்பவர், கடந்த 18-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக காஷ்மீரிலுள்ள சுற்றுலா பகுதிகளுக்கு தனது குடும்பத்தினரை அழைத்து சென்றார்.

ஸ்ரீஜித் ரமேசன் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து கொண்டு இருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளும் அவரது வீடியோவில் சிக்கினர். பஹல்காம் நகரத்தில் இருந்து ஏழரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேதாப் பள்ளத்தாக்கு என்ற சுற்றுலா தலத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் இவையாகும். அவர் தனது மகளின் நடன வீடியோவை இங்கே படம் பிடித்துக்கொண்டு இருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளின் உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. இருப்பினும், தீவிரவாதத் தாக்குதல் கடந்த 22-ஆம் தேதி நடந்தது.

அதன்பின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளின் ஓவியங்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டனர். இவற்றை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம், தனது செல்போனில் பதிவான வீடியோ காட்சிகளுடன் தீவிரவாதிகளின் முகமும் ஒத்துபோவதாக ஸ்ரீஜித் ரமேசன் அடையாளம் கண்டுள்ளார்.

இதன் மூலம், அவர் நேரடியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை அணுகி, அவர்களிடம் வீடியோ காட்சி ஒப்படைத்தார். அந்த வீடியோவை ஸ்ரீஜித் ரமேசனிடம் பெற்றுக் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மை மற்றும் தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.