சேலம் மாவட்டம் வீரப்பன்பாளையம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துகொண்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “எடப்பாடி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. இத்தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும், எம்எல்ஏவாகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் பார்க்கிறேன். தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அப்படி செல்லும்போது அனைத்து இடங்களிலும் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர்.
ஒருசில இடங்களில்தான் எனது பெயர் எழுதப்பட்டுள்ளது. நூற்றுக்கு 90 சதவீதமான இடங்களில் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் அத்தனை பேரும்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். எடப்பாடி என்று சொன்னாலே, அந்தப் பகுதியைச் சார்ந்த அனைவரையும் அந்த பெயர் குறிக்கும். அதிமுகவின் வெற்றி உங்கள் அனைவரையும் சார்ந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அதில், அதிமுக வேட்பாளர்களிலேயே அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தொகுதி சட்டமன்ற தொகுதி எடப்பாடி.
சுமார் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இந்தமுறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தத் தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றித் தந்துள்ளோம். தமிழகத்துக்கே ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக எடப்பாடி தொகுதி விளங்கி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களைச் செய்யலாம், அதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது என பழனிசாமி பேசினார்.