மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதி ஒதுக்கிய நிலையில், தமிழக அரசு வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொண்ட நிலையில் பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்த மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் பழனிசாமி பதிலளித்தார். அப்போது, “கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார கொள்கை திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா, டாடா, டெல்டா உள்ளிட்ட பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன.
நீர் மேலாண்மை திட்டங்கள், மருத்துவ கல்லூரி உட்பட புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இது இந்த மாவட்டத்தில் மட்டும் தொடங்கப்பட்ட திட்டங்கள். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்கிற புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.
மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட மாணவர்களை பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்துள்ளன. மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம். இப்பணிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என பழனிசாமி தெரிவித்தார்.