பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளியான நாதக நிர்வாகி கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள கந்திகுப்பம் பகுதியில், கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பர்கூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த பள்ளி வளாகத்தில் கடந்த 5 – ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. இதனால் இங்குப் படிக்கும் 17 மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தங்கி தினமும் முகாமில் பங்கேற்றனர்.

இந்நிலையில், NCC முகாமிற்குச் சென்ற 8 -ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 8- ஆம் தேதி அதிகாலை நேரத்தில் பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, NCC பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வந்துள்ளார். அங்குத் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை அழைத்துச் சென்று என் பக்கத்தில் உட்கார வேண்டும் என கூறியிருக்கிறார். இதனால் அச்சத்தில் இருந்த மாணவி என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார். அந்த நேரத்தில், சிவராமன் அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் புகார் கூறியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்ற நோக்கத்தில் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து முகாம் முடிந்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி மிகுந்த சோர்வுடனும் பதட்டத்துடனும் இருந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி இரவு, அந்த மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நடந்த விஷயங்களைத் தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர் மாணவியைக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட காவல் ஆய்வாளர் சூர்யகலா தலைமையில் விசாரணை நடத்தி அந்த பள்ளியின் NCC பயிற்சியாளர் சிவராமன் மற்றும் முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவில் சிவராமனை கைது செய்யச் சென்றபோது, அவர் தலைமறைவானார்.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் சரக காவல்துறைத் துணைத்தலைவர் உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வரான திருப்பத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார், ஆசிரியை ஜெனிபர், பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்களான சக்திவேல், சிந்து, சத்யா மற்றும் முன்னாள் CRBF வீரர் சுப்பிரமணி ஆகிய 7 பேரை காவல்துறை கைது செய்தனர்.

இதனிடையே, இந்த வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் சிவராமன் மீது பாலியல் வழக்குப் போடப்படுவதற்கு ஒருநாள் முன்பு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், தலைமறைவான சிவராமன் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் சிவராமனை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர் கிருஷ்ணகிரி அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது, காவல்துறையினரிடம் இருந்து சிவராமன் தப்பியோட முயற்சி செய்தார்.

அப்போது தவறி கீழே விழுந்ததில், அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால், அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, அப்பள்ளியின் ஆசிரியை கோமதி, சிவராமனுக்கு உடந்தையாக இருந்த திம்மாபுரம் முரளி, தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துப்பட்டி சீனிவாசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.