பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை இடமாற்றம்..! மாவட்ட ஆட்சியர் அதிரடி…!

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் பழனி பங்கேற்றுவிட்டு விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு திரும்பினார்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் வழியில் கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவை பரிசோதித்தார். பின்னர் அருகில் இருந்த தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு 27 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி துவங்கும் நேரமாகியும் தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் பணிக்கு வரவில்லை.

இதனால் ஆட்சியார் மாணவர்களிடம் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்தும், மனப்பாட பகுதிகளை ஒப்புவிக்க சொல்லி கேட்டார். அதன்பின்னர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு சரியான நேரத்தில் பள்ளிக்கு வராத ஆசிரியைகள் 2 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.