ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்தது. இந்நிலையில், சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.
நேற்று மாலை ஒரு தரப்பினர், ‘‘தேர்தலில் ஓபிஎஸ்சின் பலாப்பழம் சின்னத்திற்கு ஏன் ஓட்டு போடவில்லை’’ எனக்கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அவர்கள், தெருவிற்குள் புகுந்து பெண்கள் உள்ளிட்ட சிலரை ஓட, ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெள்ளத்தாய், செல்வி, சிவமுருகன், மணிகண்டன், இருளையா, முகேஷ் கண்ணன் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கடுகுசந்தைசத்திரம் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.