பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஜித் குமார் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் குமார் இருப்பவர். சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி, இவர் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே இவருக்கு இந்தாண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை ராஷ்டிரபதி பவனில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஜித் குமார் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பத்ம பூஷன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அஜித் குமார் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டபோது, விரைவில் நேரில் சந்தித்து பேசுவோம் என சொல்லிவிட்டு அஜித் குமார் அங்கிருந்து கிளம்பி சென்றார்.