நீங்க அப்படியே சண்டை போட்டுக் கொண்டிருங்க… நாங்க வந்த வேலைய முடுச்சி விடுறோம்..!

வீட்டிற்கு தெரியாமல் காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவங்க அப்படியே சண்டை போட்டுக் கொண்டு இருக்க.. நாம வந்த வேலைய முடிக்கலாம் என்ற தொனியில் உஷாரான காதலன், காதலி கழுத்தில் தாலி கட்டி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும் இந்த நிலையில், இன்று காலை திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருமணம் அங்கிருந்தவர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் மகன் உமாபதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டாவும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்களின் காதலை பெற்றோரிடம் தெரிவிக்க பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் இருவரும் அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இன்று காலை, திருத்தணி கோவிலுக்கு வந்த காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, “எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்யப் பார்க்கிறாய்” என வாலிபரை நோக்கி கூச்சலிட்டனர். இதையடுத்து, காதலியை இவர்கள் எப்படியாவது பேசி அழைத்து சென்று விடுவார்கள் என்று உணர்ந்து உஷாரான காதலன் ஒருபுறம் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.