பயங்கரவாதிகள் வருகிறார்கள்..?, தாக்குகிறார்கள்..? , தப்பிக்கிறார்கள்..? ராணுவம் உங்கள் கையில் இல்லையா..? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.
இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், 2012 -ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய மத்திய அரசு மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மீது நரேந்திர மோடி தெரிவித்த விமர்சனங்கள், மோடிக்கே எதிராகத் திரும்பியுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மோடியின் பழைய பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு 2012 -ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு பேரணியில் நரேந்திர மோடியின் உரை, “பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்று கொண்டு இருக்கின்றன.பணம் சென்று சேர்கிறது. முழு பணவியல் அமைப்பும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் ரிசர்வ் வங்கியின் கைகளில் உள்ளது. இந்த அமைப்பு முழுவதும் உங்கள் கையில். இடையில் யாரும் இல்லை.
ஆனாலும் ஏன் உங்களால் இதைத் தடுக்கவோ அல்லது பயங்கரவாதிகளைப் பிடிக்கவோ முடியவில்லை? நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? பயங்கரவாதிகள் வருகிறார்கள், தாக்குகிறார்கள், தப்பிக்கிறார்கள். பிரதமரே, சொல்லுங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரப் பாதுகாப்பு, கடற்படை எல்லாம் உங்கள் கையில் இல்லையா? ஆனாலும் யங்கரவாதிகள் வெளிநாட்டில் இருந்து எப்படி நாட்டிற்குள் நுழைகிறார்கள்? எல்லைகளைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு இல்லையா?” என நரேந்திர மோடி பேசி இருந்தார். இந்நிலையில் “மோடி தன்னைத்தானே கேள்வி கேட்கிறார்” என்ற வாசகத்துடன் சநரேந்திர மோடி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.