“நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்” திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி கால்நடை பராமரிப்பு துறை சார்பாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எம்.நடராஜன் தலைமையில், பசுமை தமிழகம் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை, சீமை அகத்தி,கொடுக்கா புளி, புங்கன், பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளான வகுரம்பட்டி, அணியாபுரம், வளையபட்டி, பாலப்பட்டி, அலங்காநத்தம், செவிந்திப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தக வளாகங்களிலும் மற்றும் மேய்ச்சல் தரைநிலங்களிலும் நடவுசெய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் நித்யா, பிரபாவதி, மாணிக்கவாசகம், ராஜாமணி, தங்கராஜ் மாதேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.