நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை செலவுக்கு அவசர மாக பணம் தேவை என்றும் கூறி நம்ப வைத்து பணமோசடி செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவ ரின் நண்பர் லண்டனில் வசித்து வருகிறார். அவரின் புகைப்படத்தை செல்போனில் முகப்பு படமாக வைத்த எண்ணில் இருந்து முதியவருக்கு இரவு 10 மணி அளவில் குறுஞ்செய்தி வந்தது.

அதில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடனே ரூ.1½ லட்சம் அனுப்பி வைத்தால், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும் பணத்தை தந்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்த முதியவர், உடனே தனது நண்பரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவர், தனக்கு குறுஞ்செய்தி வந்த செல்போன் வாட்ஸ்அப்பில் தனது நண்பரின் முகப்புபடம் இருந்ததால் அதை நம்பி அந்த எண்ணுக்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பி உள்ளார். மறுநாள் அவரது நண்பரிடம் பேசிய போது தான் தன்னிடம் யாரோ பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதுபோன்ற நண்பரின் மருத்துவ சிகிச்சை பணம் தேவை என்று குறுஞ்செய்தி வந்தால் உடனே சம்மந்தப்பட்ட நபரிடம் பேசி உறுதி செய்து கொண்டே பிறகு பணம் அனுப்ப வேண்டும். அறிமுகம் இல்லாத நபர் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து வரும் தகவல்களை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.