கோயம்புத்தூரில் நக்கீரன் வார பத்திரிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாகக் கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவித்து இருந்த நிலையில், ஓம்கார் பாலாஜியை கைது செய்யவில்லை என்று கூறி காவல்துறை விடுவித்துள்ள சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார்.
இது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கோயம்புத்தூர் கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் காவல்துறை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை காவல் துறையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து இன்று காலை போராட்டம் நடத்த அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ஓம்கார் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றதாகவும், கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபால் குறித்து மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஓம்கார் பாலாஜி தனது வழக்கறிஞர் மூலம் நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடி இருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் ஓம்கார் பாலாஜியை வருகிற புதன்கிழமை அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திரு ஓம்கார் பாலாஜியை காவல்துறையினர் அத்துமீறி கைது செய்தனர். இது முற்றிலும் தவறான முன்னுதாரணம் ஆகும். நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஓம்கார் பாலாஜிக்கு அவகாசம் அளித்துள்ளதை மீறி நள்ளிரவில் அத்துமீறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் தமிழக முழுவதும் இன்று காலை 11 மணியளவில் ஓம்கார் பாலாஜி அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் கோவை C 2 ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் முன்பாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டம் கூட ஆரம்பித்தனர். தமிழகம் முழுக்க இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இமக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓம்கார் பாலாஜியை விடுதலை செய்தனர். எனவே நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்படுகிறது என அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.