மதுரை ஆதீனத்தின் பேட்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து சமூகத்தை தூண்டும் வகையில் இது உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் அனைததுலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள காரில் சென்ற மதுரை ஆதீனம் ஞான சம்பந்த தேசிய பரமாச்சாரியார் கார் உளுந்தூர்ப்பேட்டை சேலம் ரவுண்டானாவை கடந்து சென்றபோது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், கார் சேதமடைந்து, காரில் தூங்கிக் கொண்டிருந்த ஆதீனம் காயமின்றி உயிர் தப்பியதாகவும் சொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “தொடர்ந்து சமூகப்பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதால், வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கலாம்” விபத்தை ஏற்படுத்திய நபர்கள் குல்லா அணிந்திருந்தார்கள், தாடி வைத்திருந்தார்கள் என இஸ்லாமியர்கள் அவர்கள் என்பதை மறமுகமாகக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மதுரை ஆதீனம் வாகன விபத்து விவகாரத்தில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும், மதுரை ஆதீனத்தின் கார் தான் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளது என தமிழக காவல் துறை விளக்கம் அளித்தது. மேலும், அதுதொடர்பாக காவல் துறை வெளியிட்ட CCTV-யில், மதுரை ஆதீனம் கார்தான் மற்றொரு கார் மீது உரசிச் செல்வது தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
CCTV காட்சிகள் வெளியானதை அடுத்து பொய் தகவல்களை பரப்பி மதக் கலவரம் உண்டாக்க முயற்சித்த மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை, கோவை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், “மதுரை ஆதீனம் உயிருக்கு ஆபத்து என்று வெளியான தகவல் உண்மையில் அதிர்ச்சியை அளித்தது. அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், காவல் துறை வெளியிட்ட சிசிடிவி காட்சிகளில் அவ்வாறான கொலை முயற்சி சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை, அது இயல்பாக நடைபெற்ற ஒரு விபத்து என்று தெரிய வந்துள்ளது.
மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள மடாதிபதி, சமூக பதற்றம் ஏற்படாத வகையில் பொறுப்புடன் கருத்து சொல்ல வேண்டிய கடமைப்பட்டவர். சமூக அமைதியை நிலைநாட்டுவதில் அவருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், தன்னை கொல்ல முஸ்லீம்கள் முயற்சி செய்தனர், இதற்கு பின்னால் பாகிஸ்தான் சதி உள்ளது என்று எல்லாம் பேசியது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சியாகவும் இது உள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து சமூகத்தை தூண்டும் வகையில் இது உள்ளது. இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை தூண்டும் குற்றச் செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் மதுரை ஆதீனத்தின் பேட்டியை சாதாரணமாக கடந்து சென்றுவிடக்கூடாது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.