திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை என்ன எனக்கு இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நியூஸ்18 தொலைகாட்சி நடத்தும் களம்18 நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.
அப்போது, விசிக, திமுக கூட்டணியில் உள்ள கட்சியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். திமுக கூட்டணி என்பது மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்த கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியின் நோக்கத்தை நோக்கி பயணிப்பதுதான் என்னுடைய தேவையாக இருக்க முடியும். அந்த கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று நான் ஏன் முடிவு செய்ய வேண்டும்? அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை.
கூட்டணியில் இருந்தால் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம். தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டிக்கிறோம். நாங்கள் எதுவும் செய்வதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது எங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி. திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் தொடுகிறோம். உள்ளே இருந்து எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.