தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய விஜய் பாசிஸ்டுகள் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார். அப்போது,இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் “விஜய் அவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார். அவரது தொண்டர்கள் அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பல்வேறு யூகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார்.
நண்பர்கள் யார் யார் என அடையாளம் காட்டுவதை விட தன்னுடைய எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார் யார் நமது நட்பு சக்திகள் யார் யாரோடு நாம் இணைந்து செயல்பட முடியும் என தமது தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தம்முடைய எதிரிகள் யார் என்று வரிசைப்படுத்துகிற போது பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும் ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் கூறினார். பிளவுவாத சக்திகள் என்று அவர் சொல்கிற போது வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்டு இந்த கட்சிதான் இந்த அமைப்புதான் என்று அடையாளப்படுத்தவில்லை.
பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் அந்தப் பிளவுவாத அரசியலில் தமக்கு உடன்பாடு இல்லை இத்தகைய பிளவுவாத கட்சிகளை எதிர்ப்போம் என்று மேம்போக்காக சொல்கிறார். அதிலே ஒரு முரண்பாடும் தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்கிற போது ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என்று நாம் மகிழ்ச்சி அடைகிற வேளையில், பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது பெரும்பான்மைவாதத்தை பேசுகிறார்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
அவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால் பெரும்பான்மைவாதத்திற்கு துணை போகிற ஒரு நிலைப்பாடாக அது அமைந்து விடும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை வாதம் பேசுகிற ஒரே கட்சி பாஜக. அதற்கு துணை நிற்கிற சங்பரிவார்கள் அதனால் சிறுபான்மை சமூகத்தினர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இதர மத வழி சிறுபான்மையினர்களும் அச்சத்தோடு பீதியோடு இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
ஆனால், எனக்கு பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலிலேயே நம்பிக்கை இல்லை அதை எதிர்க்கிறோம் என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகிறார். அப்படி என்றால் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு பௌத்தர் சமணர் போன்ற சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு குறித்து அவர் என்ன நிலைபாட்டை கொண்டிருக்கிறார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அது ஒரு குழப்பமான நிலையாக இருக்கிறது.
பாசிச எதிர்ப்பை பற்றி பேசுகிற போது மிக இலகுவாக கிண்டல் அடித்து விட்டு பாசிச எதிர்ப்பையே ஒன்றுமில்லை அது தேவையில்லை என்பது போல கடந்து போகிறார். ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா’ என்று கேட்கிறார். அதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று பாசிச எதிர்ப்பு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம். இன்னொன்று நீங்களும் பாசிஸ்டுகள் தான் நீங்கள் ஒன்றும் சனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக புரிந்து கொள்ளலாம்.
நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று அவர் திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாவை பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்றாலே பாஜக எதிர்ப்பு தான் சங்பரிவார் எதிர்ப்பு தான்.
ஆக ‘நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று சொல்லக்கூடாது’ என நான் சொல்ல முடியாது அது அவருடைய கருத்து. அப்படி என்றால் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என அனைவரையுமே பாசிஸ்டுகள் என கேலி செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதிலே பாசிச எதிர்ப்பு தேவை இல்லை என்கிற கருத்து தொனிப்பின் மூலம் பாஜக எதிர்ப்பு தேவை இல்லை என்கிற பொருளும் வெளிப்படுகிறது. ஆக பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது அவரது உரையில் வெளிப்படுகிறது.
அவரது உரையில் அதிகம் திமுக எதிர்ப்பு நெடி வீசுகிறது. அவரது ஒட்டுமொத்த உரையின் சாராம்சமும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அரசியலை எதிர்ப்பதாக இருக்கிறது. நண்பர் விஜய் அவர்களிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் இல்லை, செயல் திட்டங்கள் இல்லை.” எனக் குறிப்பிட்டேன் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.