தெலங்கானா கனமழை எதிரொலி ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை..! பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்களும் நாசம்..!

தெலங்கானாவில் கன மழை காரணமாக நல்கொண்டா, கம்மம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பேரிடர் மீட்புகுழுவினர் இரவு, பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தெலங்கானாவில் 18-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கன மழைக்கு உயிர் சேதத்துடன் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்களும் நாசம் அடைந்துள்ளதால், இதைதேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், தெலங்கானா அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தனர்.

அதன்பேரில் ரூ.100 கோடிக்கான காசோலையை அரசு ஊழியர்கள் சங்க தலைவர் லச்சி ரெட்டி தலைமையில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினர். இதற்கிடையே, மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று ஹைதராபாத் வானிலை ஆராய்ச்சி மையம் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளாவின் பல பகுதிகளில் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.