<தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தை சேர்ந்த பவுன்ராஜ். இவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், தென்காசி, புளியங்குடி நகராட்சியில் கடந்த 2017, 18-ம் ஆண்டுகளில் ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பின்னர் பணிமாறுதலாகி கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பவுன்ராஜ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நகராட்சி பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
<வால்பாறை நகராட்சியில் கடந்த சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு சட்ட விரோதமாக ஒப்பந்ததாரர்களுக்கு கான்டிராக்ட் வழங்கி கோடிக்கணக்கில் பணம் விடுவித்ததாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தார்.
<இது குறித்து விசாரணை நடத்த கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜ், திருப்பூர் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சரவணகுமாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் முன்னிலையில் கோயம்புத்தூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
<அப்போது நடைபெற்ற சோதனையில் பவுன்ராஜ் அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு இருந்ததும், ஓராண்டு காலத்தில் மட்டும் 1256 காசோலைகள் மூலம் 15.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை முறைகேடாக விடுவித்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் கோயம்புத்தூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
<இதனைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் பொறுப்பில் இருந்து பவுன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மோசடி தொடர்பாக பவுன்ராஜ் மீது கோயம்புத்தூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர். 15 கோடி மோசடி ஒரு வழக்காகவும், 35 லட்சம் மோசடி செய்ததாக ஒரு வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது.
<இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் 2 கோடி ரூபாய்க்கும், மேல் சொத்து சேர்ந்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து இன்று பணி நீக்கப்பட்ட ஆணையருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது, குறிப்பாக தென்காசி அய்யாபுரத்தில் உள்ள இவரது வீடு மற்றும் இவரது தாயார் பெயரில் தென்காசி நகர பகுதியான மங்கம்மாள் சாலையில் உள்ள ஜே.எஸ்.ஆர்.கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ராபின்சன் ஞானசிங் தலைமையில் திடீர் சோதனையானது நடைபெற்றது.
<காலை முதல் பல மணி நேரம் இந்த சோதனையானது நடைபெற்றது. பல மணி இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையால் தென்காசி நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.