தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

தமிழத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நடைபெறுவது வழங்கமான ஒன்றாகும். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் , உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்ம், சிவகிரி வெள்ளானை கோட்டை மூக்கையா தெருவை சேர்ந்த முத்துராஜ் மனைவி செல்வராணி என்பவருக்கு 12 வயதில் மகன் இருப்பதாகவும், சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தனது கணவர் முத்துராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அச்சுறுத்தல் விடுவதாகவும் இதுகுறித்து, செல்வராணி பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறி தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க தனது மகனுடன் வந்துள்ளார்.

அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்த காவல்துறை அவரை தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.