துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி

சென்னை எண்ணூரிலுள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த வெங்கடேசன், கடந்த 2013ம் ஆண்டு விருப்பு ஓய்வு பெற்று இவருடைய மகன் விஜயராகவன் என்பவருக்கு வேலை தேடி வந்துள்ளார். அப்போது, வெங்கடேசனுக்கு அவரது நண்பர் ஆனந்த் மூலம் அறிமுகமான சுவாதீஸ்வரன் என்பவர், சென்னை துறைமுகத்தில் உயர் பதவியில் உள்ளவர்களுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும் அவர்கள் மூலம் உங்கள் மகன் விஜயராகவனுக்கு துறைமுகத்தில் காலியாக உள்ள உதவியாளர் வேலையை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும், சுவாதீஸ்வரன் மனைவி அனிதா சென்னை துறைமுகத்தில் உறுப்பினராக ஆக பணிபுரியும் தனசேகர், நக்கீரன், கார்கோ செக்‌ஷனில் பணிபுரியும் சங்கரலிங்கம் ஆகியோர் இவரது நெருங்கிய குடும்ப நண்பர்கள் என்றும் அவர்கள் மூலமாக கட்டாயம் துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். அதன் பேரில் வெங்கடேசன், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி 2021ம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.54 லட்சம் பணத்தை சுவாதீஸ்வரனுக்கு கொடுத்துள்ளார்.

வெங்கடேசன் மகனுக்கு வேலை வாங்கி தராமல் சுவாதீஸ்வரன் மற்றும் அவரது அனிதா தலைமறைவாகி விட்டனர். பின்னர், இதுதொடர்பாக வெங்கடேசன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொரட்டூர், தமிழ்நாடு மின்வாரிய அலுவலக காலணியில் வசித்து வரும் சுவாதீஸ்வரன், அவரது மனைவி அனிதா மற்றும் துறைமுகத்தில் வேலை செய்து வரும் சங்கரலிங்கம் என பொய் சொல்லி ஏமாற்றிய சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.