‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு. இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம் அன்பும், நன்றியும்! என எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.